மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் - அவசரநிலையை பிறப்பிக்க டிரம்ப் தீவிர ஆலோசனை

Report

மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக அமெரிக்காவில் அவசரநிலை கொண்டு வருவது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டுவேன் என அதிபர் தேர்தல் பிரசாரத்திலேயே டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க செலவினங்களுக்கான நிதி மசோதாவுடன், ரூ.40 ஆயிரம் கோடி செலவில் தடுப்பு சுவர் கட்டுவதற்கும் அனுமதிக்க வேண்டும் என எம்.பி.க்கள் மற்றும் செனட் உறுப்பினர்களிடம் அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காததால், அமெரிக்க அரசு கடந்த 20 நாட்களாக முடக்கத்தை சந்தித்துள்ளது.

8 லட்சம் ஊழியர்கள் விடுமுறையிலும், சம்பளம் இல்லாமலும் பணியாற்றி வருகின்றனர். அரசு முடக்கத்தை போக்குவதற்காக வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்புடன், ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் சந்தித்து பேசுவதற்கான கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

சுவர் கட்ட நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி மறுப்பு தெரிவித்ததால், கூட்டத்தை விட்டு அதிபர் டிரம்ப் வெளியேறினார். தற்போது டெக்சாஸ் நகரில் முகாமிட்டுள்ள அதிபர் டிரம்ப், தடுப்புச் சுவர் திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறார்.

அப்போது அவரிடம், ‘‘எல்லையில் சுவர் கட்டுவதற்காக அவசரநிலை அறிவிக்கும் திட்டம் ஏதும் உள்ளதா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த டிரம்ப், ‘‘அவசரநிலை கொண்டு வருவது பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம்.

இது குறித்து விரிவாக ஆலோசிக்க விரும்புகிறேன். இதை உடனடியாக செய்ய வேண்டும் என நினைக்கிறேன். ஏனென்றால், எல்லையில் சுவர் கட்டுவது அதிக செலவான திட்டமல்ல. இதற்கான செலவை விட அதிகமாக, நாம் ஒவ்வொரு ஆண்டும் சேமிக்க முடியும்’’ என்றார்.

632 total views