வெதுப்பகத்தில் தீ விபத்து! - இரண்டு தீயணைப்பு படையினர் பலி!!

Report

சனிக்கிழமை காலை 9 ஆம் வட்டாரத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில், இரண்டு தீயணைப்பு படையினர் உயிரிழந்துள்ளதாக சற்று முன்ன ர்செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த பெரும் வெடிப்பு எரிவாயு கசிவினால் ஏற்பட்டுள்ளது என உறுதிசெய்யப்பட்டுள்ளது. பலர் காயமடைந்துள்ள நிலையில், இரண்டு தீயணைப்பு படையினர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை மேலும் 10 பேர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அவசர பிரிவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் மொத்தமாக 37 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் 200 தீயணைப்பு படையினரும் 100 காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள வேளையில், தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கியிருந்ததாகவும், மீட்கப்பட்ட குறித்த அதிகாரியே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினருடன் உள்துறை அமைச்சர் Christophe Castaner சந்திப்பு நடத்தினார். <<நான் தீயணைப்பு படையினரின் அசாத்திய பணிக்கு தலை வணங்குகிறேன். அவர்கள் பல உயிர்களை காப்பாற்றியுள்ளனர். அவர்கள் மிக உன்னதமான பணியினை மேற்கொண்டுள்ளனர்>> என அவர் தெரிவித்துள்ளார்.

பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ, உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, இரங்கல் செய்தியும் வெளியிட்டார். அதில் அவர் <<அவர்களை நாம் எப்போதும் மறக்கமாட்டோம்>> என குறிப்பிட்டார்.

1141 total views