மழைநீர் வடிகாலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு!

Report

தென் ஆப்பிரிக்காவின் வடக்கு டர்பன் நகரில், வீதியோரம் இருந்த மழை நீர் வடிகாலில் பச்சிளம் குழந்தை ஒன்று உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வீதியோரமாக சென்ற ஒருவர் குழந்தை அழுவது போன்ற சத்தம் கேட்டதும். அருகில் இருந்த மழைநீர் வடிகாலுக்கு பக்கத்தில் தேடிய போது புதிதாக பிறந்த பெண் சிசுவொன்று இருப்பதை கண்டுள்ளார்.

இதில், தகவல் தெரிவிக்கப்பட்டதின் அடிப்படையில், பாதுகாப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதையடுத்து, சுமார் 3 மணி நேர முயற்சியின் பின்னர் சிசுவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அந்த சிசு பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட சிசு டர்பனில் உள்ள இன்கோசி ஆல்பர்ட் லுத்துளி மருத்துவமனைக்கு வான் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது.

அந்த சிசுவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில், சிசுவின் உடலில் லேசான காயங்கள் மற்றும் வெட்டுகள் ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என தெரிவித்தனர்.

இந்த நிலையில், சிசுவை அங்கு அநாதரவாக விட்டுச் சென்ற பெற்றோரை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1381 total views