மசூதிகளில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் - நியூசிலாந்து பிரதமர்!

Report

மசூதிகளில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கூறியுள்ளார்.

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 49 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்து கருப்பு தினம் என்று அனுசரித்திருந்தார். பின்னர், தாக்குதல் நடத்திய குறித்த பகுதிக்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக பிரதமர் ஜெசிந்தா தலைமையில் சிறப்பு பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் துவக்கத்திலேயே, அரபு மொழியில் வணக்கம் கூறிவிட்டு ஜெசிந்தா பேச துவங்கினார்.

இதில் அவர் பேசும் போது, பயங்கரவாத நடவடிக்கையால் பல உயிர்களை பலி வாங்கி உள்ளான். அதனால் அவனது பெயரை கேட்கக்கூட விரும்பவில்லை. சட்டம் முழு வீச்சில் அவன் மீது பாயும்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக எம்பிக்கள் பணியாற்றுவார்கள்.

அவன் ஒரு பயங்கரவாதி, குற்றவாளி. ஒருபோதும் அவனது பெயரை நான் உச்சரிக்க மாட்டேன். நீங்களும் அவனது பெயரை உச்சரிப்பதை விடுத்து, அவனால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பேசுங்கள் என அனைவரிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.

முன்னதாக நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில், நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் தானியங்கி துப்பாக்கியையும் வாங்க முடியும்.

எனவே, நாட்டில் நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து 10 நாட்களுக்குள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவெடுக்கப்படும் என பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3639 total views