திமிங்கிலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் - கடல் வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல்?

Report

இன்றைய உலகில் பிளாஸ்டிக் பாவனையானது சூழலை மாசடைய செய்வதுடன் ,உயிரினங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது. இது மனிதனின் தவறான செயற்பாட்டினால் மிருகங்களின் அழிவிற்கும் வித்திட்டுள்ளது.

அந்த வகையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்கரையில் கடந்த சனிக்கிழமை திமிங்கிலம் ஒன்று இறந்து கரை ஒதுங்கியுள்ளது. இளம் வயதுடைய அந்தத் திமிங்கிலத்தின் வயிற்றில் 40 கிலோ கிராம் பிளாஸ்டிக் இருந்துள்ளது. அந்த பிளாஸ்டிக்குகள் திமிங்கிலத்தின் இரைப்பைக்குள் அடைப்பை ஏற்படுத்தியதன் மூலம் இறந்துள்ளது. இறந்த திமிங்கிலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வு மற்றும் ஆய்வு செய்துள்ளனர் டி'போன் கலெக்டர் மியூசியத்தின் (D’Bone Collector Museum) கடலியல் உயிரியலாளர்கள்.

அவர்கள் அதிர்ச்சியாகத் தெரிவிப்பது என்னவென்றால் திமிங்கிலத்தின் வயிற்றில் அதிகமான அளவு பிளாஸ்டிக் கண்டறியப்படுவது இந்த முறைதான். அதிலும் இளவயதுடைய திமிங்கிலத்தின் வயிற்றில் என்பது பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது. டி'போன் கலெக்டர் மியூசியத்தின் முகப்புத்தக பக்கத்தில் புகைப்படத்தையும் தகவல்களையும் பதிவேற்றியுள்ளனர். திமிங்கிலத்தில் இருந்த 40 கிலோ பிளாஸ்டிக்கில் 16 அரிசி மூட்டை பிளாஸ்டிக்குகள், மேலும் பல ஷொப்பிங் பிளாஸ்டிக் பைகள் எனத் தெரிய வருகிறது. திமிங்கிலத்தின் வயிற்றிலிருந்து குப்பைக் குவியல் போன்று பிளாஸ்டிக்குகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன.

கடலைக் குப்பைக் கிடங்காக மாற்றி வருவதற்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்கிறார்கள் கடலியல் உயிரியலாளர்கள். ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்திக் குப்பையில் போடுவது தெற்கு ஆசியாவில் அதிகமாக உள்ளது. சீனா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய ஐந்து நாடுகள்தாம் உலகிலேயே அதிகமான பிளாஸ்டிக்குகளை கடலுக்குள் கொட்டியுள்ளன என 2017 ம் ஆண்டின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் ஜுன் மாதம் தாய்லாந்தில் இறந்து ஒதுங்கிய திமிங்கிலத்தின் வயிற்றிலிருந்து 8 கிலோ பிளாஸ்டிக் எடுக்கப்பட்டன. உலகிலேயே அதிகமான திமிங்கிலங்கள் வாழும் இரண்டாவது இடமாக பிலிப்பைன்ஸ் இருக்கின்றது. தொடர்ச்சியாக பிளாஸ்டிக்கை உட்கொண்டு கடல்வாழ் உயிரினங்கள் இறப்பது சமீப வருடங்களில் அதிகரித்துள்ளது. கடலில் கலந்துள்ள பிளாஸ்டிக்கை அகற்றுவதற்குச் சர்வதேச அளவில் முயற்சிகளும் திட்டங்களும் எடுக்கப்பட்டு வருகின்றன.

3410 total views