ஆப்கானிஸ்தானில் மழை, வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!

Report

ஆப்கானிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

34 மாகாணங்களை கொண்ட ஆப்கானிஸ்தான் நாட்டில் மேற்கு பகுதியில் ஹேரட் என்ற மாகாணம் அமைந்துள்ளது.

இந்த மாகாணத்தின் தலைநகரான ஹேரட் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலையில் இருந்து இன்று அதிகாலை வரை தொடர்ந்து 24 மணிநேரமாக கனமழை பெய்தது.

இதனால் இந்த மாகாணத்தில் சில பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. பல்லாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மழை நீரில் மூழ்கியதால் உணவு மற்றும் பணப்பயிர்கள் நாசமடைந்தன.

அருகாமையில் உள்ள பாமியான் மாகாணத்திலும் கடந்த இருநாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. உடன் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது.

உறைப்பனியில் சிக்கிய சுமார் 400 பேரை மீட்பு படையினர் காப்பாற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், ஹேரட் மாகாணத்தில் மழை, வெள்ளம் சார்ந்த விபத்துகளில் பத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், காணாமல்போன சிலரை தேடும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்த மாகாணத்தின் அரசு உயரதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

666 total views