சுதந்திரத்தை பறிக்கும் சட்டத்தை ரத்து செய்க –சூடான் ஆர்ப்பாட்டக்காரர்கள்!

Report

சூடானில் தற்போது காணப்படும் அனைத்து கடுமையான சட்டங்கைளையும் நீக்கி இறையாண்மையும் சுதந்திரமும் கொண்ட நாடாக மாற்ற வேண்டுமென போராட்டத்தை முன்னெடுத்துள்ள அமைப்புகளில் ஒன்றான சூடான் புரொஃபஸனல் அசோசியேஸன்ஸ் வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு சேவைகள் சட்டம், பொது ஒழுங்கு சட்டம், தொழிலாளர் தொழிற்சங்கங்கள் தொடர்பான சட்டம் மற்றும் பத்திரிகை – பிரசுரங்கள் சட்டம் ஆகியவற்றை உடன் ரத்துசெய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

இவை மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் காணப்படுவதாக அந்த அமைப்பின் பேச்சாளர் மொகமட் நாஜி எலசம் குறிப்பிட்டுள்ளார்.

சூடானில் மக்களாட்சி ஏற்படுத்தப்படவேண்டுமென போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தேசிய காங்கிரஸ் கட்சியை கலைத்து அதன் சொத்துக்கள் மற்றும் உடைமைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் பொருளாதார நிறுவனங்களை கலைத்து அதன் சொத்துக்களை நிதியமைச்சிற்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் போராளிக் குழுக்களையும் கலைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.சூடானில் கடந்த மூன்று தசாபத்காலமாக நீடித்த ஜனாதிபதி ஒமரின் ஆட்சி கடந்த வாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அவரை சிறைபிடித்த இராணுவம், இடைக்கால இராணுவ சபையை அமைத்து நாட்டை வழிநடத்திச் செல்கின்றது. எனினும், மக்களாட்சியை ஏற்படுத்த வேண்டுமென மக்கள் வீதிகளில் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

எவ்வாறாயினும், போராட்டங்களை கலைக்க மாட்டோம் என்றும், மக்கள் தெரிவுசெய்யும் பிரதமரை நியமிப்பதாகவும் இடைக்கால இராணுவச் சபை அறிவித்துள்ளது.

276 total views