என் மகன் இறந்துவிட்டான்! கதறும் Jet Airways ஊழியர்

Report

விஜய் சாய் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) ஒரு விமானப் பராமரிப்புப் பொறியாளர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

மாதம் சில லட்சங்களை சம்பளமாக பெற்று வந்தவர். கடந்த டிசம்பரில் இருந்து இவருக்கு சம்பளமே கிடைக்கவில்லை. கடந்த மார்ச் 16, 2019 அன்று நண்பர்கள் மற்றும் சகப் பணியாளர்கள் இருக்கும் வாட்ஸப் குழுவில் ஒரு வேண்டுகோள் வைக்கிறார்.

என் மகனுக்கு aplastic anemia என்கிற நோய் இருக்கிறது. இந்த நோய் இருப்பவர்களுக்கு இயற்கையாக ரத்தம் சுரக்காது.

இதற்கு மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கும் சிகிச்சை bone marrow transplant. இதற்கு சுமார் 25 லட்சம் ரூபாய் செலவாகும் என சுற்றி வளைத்துச் சொல்லி இருக்கிறார்கள். இது தான் அந்த வாட்ஸப் செய்தி.

ஏகப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் ஒன்று சேர்ந்து அடித்துப் பிடித்து பணம் திரட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சக விமானிகள் ஊழியர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து முதலில் விஜய் சாய்க்காவது சம்பள பாக்கிகளைக் கொடுத்துவிடுங்கள் எனக் கடிதம் எழுதுகிறார்கள். பலன் இல்லை. இன்னும் சம்பளம் வந்த பாடில்லை.

விஜய் சாயின் செல்ல மகன் aplastic anemia நோயின் தீவிரத்தால் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பே இறந்து போகிறார். கிட்ட தட்ட விஜய் சாய் பித்த பிடித்தாற் போல ஏனோ தானோ என தற்போது வேலைக்கு வந்து கொண்டிருக்கிறாராம்.

சக ஊழியர்களாலேயே அவரைப் பார்த்து பேச முடியாமல் மெளனம் காக்கிறார்களாம். வேறு யாருக்கும் இப்படி நடக்கக் கூடாது என பிரார்தனை செய்து கொண்டிருக்கிறாராம். அழுது அழுது வரண்டு கண்களோடு வேலையையும் பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

மாதம் சில லட்சங்கள் சம்பளம் வாங்குபவர்களுக்கு உயிர் இழப்பே சம்பளத்தால் வந்துவிட்டது என்றால்... மாதம் 40,000 சம்பளம் வாங்குபவரும் கதறுகிறார்.

சுக்பீர் சிங் ஜெட் ஏர்வேஸில் லோடராக வேலை பார்க்கிறார். மாத சம்பளம் பிசினஸைப் பொருத்து 30 - 40 ஆயிரம் வரை வரும்.

மகள் சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வருகிறாராம். அவருக்கு கோச்சிங் வகுப்புகளுக்கு கட்டணம் செலுத்தமுடியாமல் தவிக்கிறார். மகனின் பள்ளிக் கட்டணங்களைக் கூட செலுத்த முடியாமல் தவிக்கிறாராம்.

ஜெட் ஏர்வேஸில் சுமார் 14,000 பேர் வேலை பார்க்கிறார்கள். விமானிகள், விமான பராமரிப்புப் பொறியாளர்கள் என மாதம் சில லட்சங்கள் வாங்குபவர்களுக்கு கூட தற்போது வேலை கிடைப்பது கடினம். காரணம் ஒரே அடியாக சந்தையில் சுமார் 1500 விமானிகள், 2000 விமான பராமரிப்பு பொறியாளர்கள் வேலை கேட்டு வந்தால் வேலை கொடுக்கும் நிறுவனம் அடித்துப் பிடித்து சம்பளத்தைக் குறைத்துவிடும். இது ஒட்டு மொத்த இந்திய விமானிகளின் சம்பளத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

5619 total views