இந்தியாவுக்கான புதிய சீன தூதர் நியமனம்!

Report

தெற்காசிய அரசியல் விவகாரங்களில் அனுபவம் நிறைந்த சன் வெய்டோங்கை இந்தியாவுக்கான புதிய தூதராக சீனா நியமித்துள்ளது.

இந்தியாவின் தூதராக உள்ள லுவோ ஜவோஹுய், சீன வெளியுறவுத் துறையின் துணை அமைச்சராக அண்மையில் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, இந்தியாவுக்கான புதிய தூதராக சன் வெய்டொங்கை சீனா நியமித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தில் திட்ட இயக்குநராக சன் வெய்டோங் தற்போது பணியாற்றி வருகிறார்.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சீனாவுக்கான இந்தியத் தூதராகக் கடந்த 2009 முதல் 2013-ஆம் ஆண்டு வரை பணியாற்றியபோது, சீன வெளியுறவு அமைச்சகத்தின் துணை இயக்குநராக வெய்டோங் பணியாற்றி வந்தார்.

அக்காலக்கட்டத்தில், ஜெய்சங்கருடன் வெய்டோங் இணைந்து பணியாற்றியுள்ளார். பாகிஸ்தானுக்கான சீனத் தூதராகவும் வெய்டோங் பணியாற்றியுள்ளார்.

வெய்டோங்கின் நியமனம் குறித்த தகவல் இந்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சீனாவிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் புதிய தூதர் வெய்டோங்குக்கு, சீனாவுக்கான இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சுட்டுரையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவுக்கான புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள சன் வெய்டோங்குக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புதிய பணியில் அவர் சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

1024 total views