இஸ்ரேல் பிரதமரின் மனைவிக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்! எதற்காக தெரியுமா?

Report

மக்களின் வரிப் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமரின் மனைவி சாரா நேதன்யாகுவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

யூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். இவர் ஏற்கனவே, 1996-99 முதல் பிரதமராக இருந்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அதோடு நேதன்யாகு கடந்த பத்து ஆண்டுகளில் 3 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசுகளை பெற்றதோடு, ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் மற்றொரு வழக்கில் நேதன்யாகுவின் மனைவி சாரா மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சில சலுகைகளுக்காக அவர் ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் அர்னான் மைக்கேல் மற்றும் ஆஸ்திரேலிய சொகுசு விடுதி உரிமையாளரான ஜேம்ஸ் பெக்கர் ஆகியோரிடமிருந்து நேதன்யாகுவும் அவரது மனைவியும் சுமார் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவில் சுருட்டுகள் மற்றும் மதுவகைகள் போன்றவற்றை லஞ்சமாக பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதோடு பிரதமருக்கான அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் சமையல் உள்ளிட்ட பணிகளை செய்ய ஆட்கள் இருந்தும் மக்கள் பணத்தை பயன்படுத்தி, விதவிதமான சுவைமிக்க உணவுகளை பிரபல உணவகங்களில் இருந்து வாங்கி உண்டது தொடர்பாகவும் சாரா நேதன்யாகு மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் அவரை குற்றவாளி என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்ததை அடுத்து , சாரா நேதன்யாகு ஒப்புக்கொண்டதாலும், குறைந்தபட்சமான தண்டனை அளிக்குமாறு கேட்டுக் கொண்டதாலும் 10 ஆயிரம் ஷெக்கெல் (சுமார் 2800 அமெரிக்க டாலர்கள்) அபராதம் விதித்து ஜெருசலேம் நகர மாஜிஸ்திரேட் அவிட்டால் சென் தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், முறைகேடாக செலவு செய்யப்பட்ட மக்களின் பணமான 45 ஆயிரம் ஷெக்கல்களை அரசு கருவூலத்தில் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

935 total views