மாயமான ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல்!

Report

ஹோர்முஜ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல் திடீர் என மாயமாகியுள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் காரணமாக பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.

கடந்த மே மாதம் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது தொடர்ச்சியாக நாசவேலை தாக்குதல் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதலின் பின்னணி அறியப்படாத நிலையில், ஈரான்தான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது. ஈரான் அதனை திட்டவட்டமாக மறுத்தது.

இந்த நிலையில், ஹோர்முஜ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல் திடீரென மாயமானது பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

டுபாயிலிருந்து புஜைரா துறைமுகம் நோக்கி சென்றுகொண்டிருந்த ரியா எனப்படும் குறித்த எண்ணெய் கப்பல் கடந்த சனிக்கிழமை இரவு மாயமானதாக கூறப்படுகின்றது.

குறித்த எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றி இருக்கலாம் என சந்தேகிப்பதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் இது குறித்து இதுவரையில் ஈரான் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5182 total views