18 டன் போதைப்பொருள்கள் அமெரிக்கக் கடற்படையால் கைப்பற்றப்பட்டது

Report

அமெரிக்காவில் போதை பொருள்களின் புழக்கம் அதிகரித்துவருவது அந்நாட்டு அரசை அதிகம் வருத்தமடைய செய்து வருகிறது. இதன் காரணமாக சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்படும் போதை பொருள்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இதற்கான பாதுகாப்பு வீரர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 18 டன் போதைப்பொருள்கள் அமெரிக்கக் கடற்படையால் கைப்பற்றப்பட்டது. பிடிக்கப்பட்ட போதை பொருள்கள் கடத்தும் கப்பல்கள் கடற்படை அதிகாரிகளால் நடுக்கடலிலேயே தீவைக்கப்படுகிறது

கடந்த சில மாதங்களாக அமெரிக்கக் கடற்படையின் விமானம் மூலம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் தொடர் சோதனை பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அதற்கு அவ்வப்போது பலனும் கிடைத்து வந்தது.

இந்நிலையில்தான் கடந்த ஜூன் மாதம் 18 -ம் தேதி கடற்படைக்கு சொந்தமான விமானம் சட்டவிரோதமாகப் பயணிக்கும் சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றைக் கண்டது. உடனடியாக அமெரிக்கக் கடற்படைக்கு இந்தத் தகவல் அளிக்கப்பட்டது.

அவர்களும் சிறிய படகுகளில் அதிவேகமாகப் பயணித்த அந்த நீர்மூழ்கிக் கப்பலைச் சுற்றிவளைத்தனர். இந்தச் சம்பவம் ஹெல்மெட் கேமராக்களில் பதிவு செய்யப்பட்டது. இது ஜூன் மாதம் நடந்திருந்தாலும் இந்த அதிரடிக் காட்சிகளை நேற்றுதான் வெளியிட்டது அமெரிக்கக் கடற்படை.

இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே பெரும் வைரல் ஆனது. தங்களின் படகிலிருந்து அதிவேகமாகப் பயணிக்கும் அந்த நீர்மூழ்கிக் கப்பலில் குதிக்கிறார் ஒரு வீரர். கடலின் நீர் மட்டத்தில் பயணிக்கும் அந்த நீர்மூழ்கி மேல் நின்று படகை நிறுத்தும்படியும் கதவைத் திறக்கும்படியும் உத்தரவிடுகிறார்.

அதன்பின்னர் அதன் கதவு திறக்கப்படுகிறது. அங்கு ஒருவர் கைகளை தூக்கியபடி சரணடைகிறார். இத்துடன் அந்த வீடியோ காட்சி முடிவுக்கு வருகிறது. சுமார் 40 அடி நீளம் கொண்ட அந்தப் படகை சோதனையிட்ட அதிகாரிகள் அதில் டன் கணக்கில் போதை பொருள்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

பெரும்பாலும் கடல் மார்க்கமாகவே கடத்தப்படும் போதை பொருள்களை தடுப்பது என்பது கடும் சிரமமான விஷயம். ஆனால் இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருள்கள் சிக்கி இருப்பது அமெரிக்க வரலாற்றில் முக்கியமானது என்கின்றனர் அதிகாரிகள். கைப்பற்றப்பட்ட போதை பொருளின் மதிப்பு சுமார் 232 மில்லியன் அமெரிக்க டாலர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,500 கோடிக்கும் மேல் செல்கிறது.

440 total views