இலங்கையில் தங்கி பணிபுரிந்த பிரித்தானியர் ஒருவர் டெங்கு நோயால் உயிரிழப்பு!

Report

பிரித்தானியாவை சேர்ந்த கட்டிட நிபுணர் ஒருவர் இலங்கையில் தங்கி பணிபுரிந்து வந்த நிலையில் டெங்கு நுளம்பு கடியின் விளைவாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் உடல்நிலை பாதிப்படைந்ததால் உயிரிழந்தார்.

பிரித்தானியாவின் பிரெஸ்டன் (Preston) நகரத்தைச் சேர்ந்த கோலின் வெயிட்சைட் (52 வயது) என்பவர் கட்டிட நிர்மாண துறையில் பணிபுரிந்து வந்தார்.

கோலின் அபுதாபி, டுபாய் போன்ற நாடுகளில் ஏற்கனவே பணியாற்றியுள்ள நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இலங்கையில் தங்கி பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில், கடந்த மாதம் கோலின் நுளம்பு கடியால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து, கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் கடந்த மாதம் 14 ஆம் தேதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து, கணவரை கவனித்து கொள்ள கோலினின் மனைவி கரோலின் இலங்கைக்கு விமான மூலம் விரைந்து சென்றார்.

தொடர்ந்து கோலினுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை அவர் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கோலின் நேற்று முன்தினம் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கோலினின் மனைவி கரோலின் கூறுகையில், நிம்மதியாகவும், நிரந்தரமாகவும் உறங்குங்கள் கோலின், என் கணவர் குணமடைந்துவிடுவார் என எதிர்பார்த்தோம், ஆனால், பக்கவாதம் ஏற்பட்டு அவர் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது, அவரின் இழப்பை ஈடு செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.

1191 total views