ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் விரக்தி

Report

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானின் நடவடிக்கைகளை, ஐ.நா. சபை மாலை அணிவித்து வரவேற்கும் என எதிர்பார்க்க வேண்டாம் எனவும், பாகிஸ்தானியர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் கண்டிப்பாக வாழக்கூடாது என்றும் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்துள்ளதை அடுத்து, பாகிஸ்தான் இந்தியாவுடனான ராஜீய உறவுகளைத் துண்டித்துள்ளது. இந்தியாவின் நடவடிக்கையை எதிர்த்து பாகிஸ்தான் ஐ.நா.வுக்குக் கடிதமும் எழுதியுள்ளது. இதற்கிடையே பி-5 நாடுகள் எனச் சொல்லப்படும் அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முஷாபராபாத் நகரில் பேட்டி அளித்த அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மக்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் இனியும் வாழக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். பி-5 நாடுகளில் எந்த நாடும் இந்தியாவின் நடவடிக்கைக்குத் தடை விதிக்கவில்லை எனவும், முஸ்ஸிம் நாடுகள் கூட பாகிஸ்தானின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா என்பது மிகப்பெரிய சந்தை எனவும், ஏராளமானோர் அங்கு முதலீடு செய்துள்ளதால், முஸ்லிம் சமூகம் அதிகமாக இருக்கும் முஸ்லிம் நாடுகள் கூட நமக்கு ஆதரவு அளிக்கவில்லை எனவும் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

1324 total views