ஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டம் - மீண்டும் விமான சேவைகள் ரத்து

Report

போராட்டக்காரர்கள் மீண்டும் முற்றுகையிட்டதால் ஹாங்காங் விமான நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட விமான சேவைகள் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சில விமானங்கள் மட்டும் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஹாங்காங்கில் குற்றமிழைப்பவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரிக்கும் சட்ட மசோதாவை, பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு பின்னர் அந்நாட்டு அரசு நிறைவேற்றாமல் கைவிட்டது. ஆனாலும் அரசின் தலைவருக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தின் போது போலீசார் தாக்கியதில் பெண் போராட்டக்காரர் ஒருவருக்கு பார்வை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை கண்டித்து திங்களன்று பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதனால் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு, விமான நிலையம் மூடப்பட்டது. தொடர்ந்து பெரும்பாலான போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறியதால் விமான நிலையம் காலையில் மீண்டும் இயங்க தொடங்கியது.

ஆனால் போராட்டக்காரர்கள் 50 பேர் தொடர்ந்து போராடி வந்த நிலையில், நேரம் செல்ல செல்ல மீண்டும் கூட்டம் சேர துவங்கியது. பயணிகளின் காத்திருப்பு வளாகத்தில் கூடிய போராட்டக்காரர்கள் தரையில் அமர்ந்து போராட தொடங்கினர். இதனால் மீண்டும் குழப்பம் நிலவியதால், அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

86 total views