சாம்பார் மசாலாவில் வயிற்றுபோக்கை ஏற்படுத்தும் பாக்டீரியா

Report

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் MDH சாம்பார் மசாலாவில் வயிற்றுபோக்கை ஏற்படுத்தும் சல்மோனெல்லா பாக்டீரியா இருந்ததை அந்நாட்டின் உணவு மற்றும் மருந்துகளை முறைப்படுத்தும் ஆணையம் கண்டுபிடித்துள்ளது.

ஐக்கிய அமீரகத்துக்கு உட்பட்ட சார்ஜாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், R-Pure Agro Specialities என்ற நிறுவனம் MDH என்ற பெயரில் மசாலா பொருட்களை பல நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. அந்தவகையில், அமெரிக்காவுக்கு அந்நிறுவனம் உள்நாட்டு வர்த்தகர்கள் மூலம் MDH சாம்பார் மசாலாவை சப்ளை செய்து, வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்கிறது.

கடந்த வாரம் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்த MDH சாம்பார் மசாலாவை உணவு மற்றும் மருந்துகளை முறைப்படுத்தும் ஆணையம் பரிசோதனை செய்தபோது அதில் உணவை விஷமாக மாற்றும் தன்மை கொண்ட சல்மோனல்லா பாக்டீரியா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பாக்டீரியாவால் நோய் எதிர்ப்பு சக்கி குறைவாக உள்ளவர்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தலைவலி, அலர்ஜி உள்ளிட்ட கடுமையான உடல் பாதிப்புகள் ஏற்படக்கூடும். இந்நிலையில் மசாலாக்களை ஆய்வு செய்து, பாக்டீரியா இருப்பதை கண்டறிந்துள்ள நிறுவனம் அதுதொடர்பான அறிக்கையை அளித்ததை அடுத்து, கடந்த வாரம் 3 முறை அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்டிருந்த இந்த மசாலாக்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் திரும்ப பெற்றது.

இந்த மசாலாக்களை திரும்ப பெறும்படி நிறுவனத்துக்கு வற்புறுத்தப்பட்டதா அல்லது நிறுவனம் தானாக அந்த முயற்சியை எடுத்ததா என்பது தெரியவில்லை. MDH சாம்பார் மசாலாக்கள் இந்தியாவிலும் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுக்கு இவ்வகை மசாலாக்களை தயாரிக்கும் அதே R-pure நிறுவனம் தான் இந்தியாவுக்கும் சப்ளை செய்கிறதா என்பது தெரியவில்லை.

கடந்த 2016-18 ஆண்டு காலக்கட்டத்திலும், சுமார் 20 முறை MDH சாம்பார் மசாலாவில் சல்மோனல்லா பாக்டீரியா இருந்ததை உறுதி செய்து அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகளை முறைப்படுத்தும் ஆணையம் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

828 total views