ஈ சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க அமெரிக்க அரசு திட்டம்

Report

ஈ சிகரெட்களுக்கு தடை விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் சமீப காலங்களில் நாடு முழுவதும் ஈ சிகரெட் பயன்படுத்துபவர்களில் கணிசமானோருக்கு நுரையீரல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டன.

இதற்கு இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், 450-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்நிலையில், அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப், சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி பயிலும் மாணவ, மாணவிகளில் 25 சதவீதம் ஈ சிகரெட் பயன்படுத்துவது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டது.

இதுகுறித்து, கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், மக்கள் உடல் நலமற்றுப் போவதையும், இளைஞர்கள் பாதிக்கப்படுவதையும் அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.மெலானியா டிரம்பும், ஈ சிகரெட் தடையை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஈ சிகரெட் சாதாரண சிகரெட்டை விட குறைந்த பாதிப்பு உள்ளது என தங்களது அங்கீகாரம் ஏதுமின்றி விளம்பரப்படுத்திய ஜூல் லேப்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.

மேலும், பல்வேறு நறுமணங்களில் வருவன உள்பட ஈ சிகரெட்டை தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அந்த ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

800 total views