நடுவானில் தீப்பிடித்த விமானம் - மயிரிழையில் உயிர் தப்பிய 200 பயணிகள்

Report

பாகிஸ்தானில் நடுவானில் விமானம் தீப்பிடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த 200 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரில் அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையம் உள்ளது.

இங்கிருந்து நேற்று முன்தினம் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 200 பயணிகளுடன் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு புறப்பட்டு சென்றது.

விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் அதன் 2 என்ஜின்களில் ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பயணிகள் மத்தியில் பதற்றம் உருவானது. அவர்கள் பயத்தில் அலறி துடித்தனர்.

இதுகுறித்து அறிந்ததும் விமானி உடனடியாக விமானத்தை விமான நிலையத்துக்கு திருப்பி அங்கு அவசரமாக தரையிறக்கினார். இதையடுத்து, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

அதனை தொடர்ந்து, என்ஜினில் ஏற்பட்ட பழுதை நீக்க விமானம் கொண்டு செல்லப்பட்டது. எனவே, பயணிகள் அனைவரும் மற்றொரு விமானத்தில் ஜெட்டா நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்ததும் விமானி சாதுரியமாக செயல்பட்டு, விமானத்தை அவசரமாக தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

1856 total views