பாண்டாவின் மர்ம மரணம்; விசாரணை ஆரம்பம்

Report

தாய்லாந்தின் சியாங் மாய் விலங்கியல் தோட்டத்தில் இளமையாகவும் ஆரோக்கியத்துடனும் இருந்த ஒரு பாண்டா திடீரென்று உயிரிழந்தது தொடர்பில் சீன அதிகாரிகள் அந்நாட்டுக்குச் சென்று விசாரணை நடத்தவுள்ளனர்.

சுவாங் சுவாங் என்ற அந்த பாண்டா சீன இணையவாசிகள் பலரின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து வந்திருந்தது. இளமையாகவும் ஆரோக்கியத்துடனும் இருந்த அந்தப் பாண்டாவின் திடீர் மரணம் பலரைத் திகைக்க வைத்திருந்தது.

சியாங் மாய் விலங்கியல் தோட்டத்தில் சுவாங் சுவாங் 2003ஆம் ஆண்டு முதல் வசித்து வந்திருந்தது. லின் ஹுவீ என்ற பெண் பாண்டாவுடன் ஆண் பாண்டாவான சுவாங் சுவாங், சியாங் மாய் விலங்கியல் தோட்டத்திற்கு இரவலாகக் கொடுக்கப்பட்டிருந்தது.

மனிதர்களால் வளர்க்கப்படும் பாண்டாக்கள் 30 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. 19 வயதிலேயே சுவாங் சுவாங் மாண்டதால் அதற்குக் கொடுக்கப்பட்ட பராமரிப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

விலங்கியல் தோட்டத்தில் சுவாங் சுவாங்கிற்குத் தீனியாகக் கொடுக்கப்பட்டிருந்த மூங்கில்கள் பாண்டாக்களுக்கு ஏற்ற உணவல்ல என்று இணையவாசிகள் சிலர் கூறியுள்ளனர். மூங்கில்களைச் சுவா சுவா சாப்பிடும் படம் ஒன்று இணையத்தில் பதிவு செய்யப்பட்டதை அடுத்து இணையவாசிகள் பலர், அதற்குக் கொடுக்கப்பட்ட மூங்கில்களைப் பற்றிய கருத்துப்பதிவுகளை வெளியிட்டனர்.

பாண்டாக்களுக்கு இளம் மூங்கில்கள்தான் கொடுக்கப்படவேண்டும் என்றும் முதிர்ந்த மூங்கில்களை அவற்றுக்கு உணவாகக் கொடுக்கக்கூடாது என்றும் இணையவாசிகள் சிலர் கூறுகின்றனர்.

775 total views