‘டார்க் வெப்’ தளங்கள் மூலம் குறிவைக்கப்பட்டுள்ள மூவர்

Report

தனது முன்னாள் காதலியின் புதிய காதலனைக் கொல்வதற்காக ‘டார்க் வெப்’ இணையத்தளங்கள் வழியாக அடியாள் ஒருவரைத் தேட முயன்ற ஆடவருக்கு நேற்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

‘கெமோரோ ஹிட்மேன்’ தளத்திள்மூலம் அடியாளைத் தேட முயன்ற 47 வயது நிதித்துறை நிர்வாகி எல்லன் வின்சன்ட் ஹுய் கிம் சேங்கிற்கு நேற்று ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. லண்டனில் தளம் கொண்டுள்ள இணைய நிபுணரான திரு கிறிஸ்டபர் மோன்டெரியா மூலம் ஹுய்யின் முயற்சி அம்பலமானது.

ஹுய்யைப்போல் பலர் இணையத்தளங்களில் அடியாட்களைத் தேடி சிங்கப்பூரில் உள்ளவர்களைக் குறிவைக்கின்றனர். அடியாட்களுக்கான ‘டார்க் வெப்’ தளங்கள் மூலம் சிங்கப்பூரில் தற்போது மூன்று பேர் குறிவைக்கப்பட்டுள்ளதாக ‘த நியூ பேப்பர்’ செய்தித்தாள் தெரிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் பொங்கோல் வட்டாரத்தைச் சேர்ந்த மாணவர் என நம்பப்படுகிறது. இரண்டாமவர், சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் வசிக்கும் ஒரு பெண் என்றும் மூன்றாமவர் அங் மோ கியோவில் வசிக்கும் பெண் என்றும் ‘த நியூ பேப்பர்’ கூறியது.

தனக்குக் கிடைத்த விவரங்களை அந்தச் செய்தித்தாள் போலிசாரிடமும் பகிர்ந்துள்ளது. ரகசியமானதாகவும் உள்ளே நுழைவதற்கு மிகக் கடினமானதாகவும் உள்ள இத்தகைய இணையத்தளங்கள், அடியாட்களை அனுப்புவதாக உறுதி கூறினாலும் பெரும்பாலான நேரங்களில் அத்தகைய தளங்களால் எந்தப் பயனும் இல்லை என்று திரு மிக்கோ நிமேலா தெரிவித்தார்.

‘கெமோரோ ஹிட்மேன்’ போன்ற பெரும்பாலான தளங்கள் மோசடியானவை என்று அமெரிக்க, பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருந்தபோதும் அவை தொடர்ந்து அச்சுறுத்தலாக விளங்குவதாக அவர் உறுதி செய்தார்.

679 total views