இளம்பெண் சடலத்துடன் காரில் சுற்றிய நபர்!!

Report

இளம்பெண்ணின் சடலத்தை காரிலேயே வைத்து, 24 மணி நேரம் சுற்றிய காதலர் கைது செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக மாநிலம், கலபுரகி மாவட்டத்தின் குவெம்பு நகரைச் சேர்ந்தவர், ஷிபாராணி ஜெயபிரபு, 22. இவருக்கு, ராஜாபுரா பகுதியைச் சேர்ந்த, உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் மகன், ரவிகுமார் பூஜாரி, 25, என்ற நபர் அறிமுகம்ஆனார்.

நாளடைவில் இருவரும் காதலித்தனர்; தனியாக, ஜாலியாக இருந்துள்ளனர். இந்நிலையில், ஷிபாராணி கர்ப்பமானார். இதனால், 4ம் தேதி, தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சென்று, தம்பதி என பொய் சொல்லி, கருவை கலைத்தனர்.

டாக்டர்கள், அளவுக்கு அதிகமான மருந்து செலுத்தியதால், ஷிபாராணியின் உடல் நிலை மோசமடைந்து இறந்து விட்டார். அதிர்ச்சியடைந்த ரவிகுமார், சடலத்தை என்ன செய்வதென்று தெரியாமல், 24 மணி நேரம், காரிலேயே வைத்து சுற்றியுள்ளார்.

பின், கலபுரகியில் சடலத்தை புதைத்தால் பிரச்னை ஏற்படுமென கருதி, அதை, தெலுங்கானாவுக்கு காரில் எடுத்து சென்று, வனப்பகுதி ஒன்றில் சடலத்திற்கு தீ வைத்துவிட்டு, கலபுரகிக்கு திரும்பினார். இந்நிலையில், மகளை காணவில்லை என, ஷிபாராணியின் பெற்றோர், பிரஹம்புரா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதற்கிடையில், பெண்ணொருவரின் சடலம், பாதி எரிந்த நிலையில் கிடைத்துள்ளதாக, தெலுங்கானா போலீசார், பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டனர்.

இதையறிந்த கலபுரகி போலீசார், ஷிபாராணியின் பெற்றோரை அழைத்துச் சென்று, பாதி எரிந்த சடலம், அவர் களுடைய மகள் தான் என, உறுதி செய்தனர். இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், சடலத்தை எரித்த ரவிகுமாரை கைது செய்தனர். இச்சம்பவம், கலபுரகியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2100 total views