மோடி பற்றிய செய்தியாளர்கள் கேள்விக்கு சூசகமாக பதிலளித்த டிரம்ப்!

Report

அமெரிக்காவில் இந்தியப் பிரதமர் மோடியை சந்திக்கும்போது சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்தியா வம்சாவளியினர் ஏற்பாடு செய்துள்ள மோடி நலமா நிகழ்ச்சி ஹூஸ்டனில் வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட 50,000 பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில், இந்திய-அமெரிக்கா இடையிலான வலிமையான நட்புறவை எடுத்துக்காட்டும் வகையில் சிறப்பு அழைப்பளராக அதிபர் டிரம்ப்பும் பங்கேற்கவுள்ளார்.

கடந்த ஜூன் மாதத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஜி-20 மாநாடு, ஆகஸ்ட் மாதத்தில் பிரான்ஸில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டுக்குப் பிறகு இரண்டு தலைவர்களும் பங்கேற்றும் மூன்றாவது நிகழ்வாக இந்த சந்திப்பு அமையவுள்ளது.

மேலும், ஒரே நிகழ்ச்சியில் மோடி, டிரம்ப் ஆகிய இருவர் மட்டுமே கலந்து கொள்வது இதுவே முதல்முறையாக இருக்கும். இந்நிலையில், அதிபர் டிரம்ப், கலிஃபோர்னியாவிலிருந்து வாஷிங்டன் நகருக்குத் திரும்பும் வழியில் விமானப் படைத்தளத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, ஹூஸ்டன் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை சந்திக்கும்போது ஏதேனும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதா? என டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு அவர் பதிலளிக்கையில், அறிவிப்புகள் வெளியாகலாம். பிரதமர் மோடி நெருங்கிய நண்பர். அவருக்கும் எனக்கும் நல்ல நட்புறவு உள்ளது என்றார்.

மோடி-டிரம்ப் சந்திப்பின்போது இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்வது தொடர்பாக முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

777 total views