இம்ரான்கானுக்கு சீன அதிபர் அளித்துள்ள வாக்குறுதி!

Report

சர்வதேச மற்றும் உள்நாட்டு சூழ்நிலைகளில் என்ன மாறுதல் ஏற்பட்டாலும், சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான நட்புறவு உடைக்க முடியாத வகையில் வலுவானதாக இருக்கும் என்று சீன அதிபர் ஜின்பிங் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ளார். இவர் பிரதமராக பொறுப்பு ஏற்றுக்கொண்டதற்கு பிறகு 3-வது முறையாக சீனா சென்று இருக்கிறார்.

நேற்று முன்தினம் சீனா சென்றடைந்த இம்ரான்கானுக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அந்நாட்டின் அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கெகியாங் ஆகியோரை இம்ரான்கான் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும், ஜின்பிங் மற்றும் இம்ரான்கான் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த நிலையில் தலைநகர் பீஜிங்கில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஜின்பிங்கை இம்ரான்கான் நேற்று மீண்டும் சந்தித்தார்.

அப்போது இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான நட்புறவு எப்போதும் உடைக்கமுடியாததாக இருக்கும் என இம்ரான்கானுக்கு ஜின்பிங் உறுதியளித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், சர்வதேச மற்றும் உள்நாட்டு சூழ்நிலைகளில் என்ன மாறுதல் ஏற்பட்டாலும், சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான நட்புறவு உடைக்க முடியாத வகையில் வலுவானதாக இருக்கும். இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு நீண்ட ஆயுளை கொண்டது என கூறினார்.

1169 total views