கண்ணுக்குப் புலப்படாத மையில் வரைந்த கட்டுரை! மாணவியின் வியக்க வைக்கும் செயல்

Report

ஜப்பானில் கண்ணுக்குப் புலப்படாத வகையிலான மையை தயாரித்து கட்டுரை எழுதிய மாணவிக்கு பேராசிரியர் அதிக மதிப்பெண் வழங்கியுள்ளார்.

இதையடுத்து, அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

நிஞ்சா வரலாற்றில் பேரார்வம் கொண்ட 19 வயதான மாணவி ஹாகா, ஜப்பானின் மீ (Mie)பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

நிஞ்சா அருங்காட்சியகத்துக்கு சென்று வந்தது குறித்து கட்டுரை எழுதி வரவேண்டும் என்றும், அதிக கற்பனைத் திறனுடன் கூடிய கட்டுரைக்கே அதிக மதிப்பெண் என்றும் பேராசிரியர் தெரிவித்தார்.

சிறுவயது முதலே நிஞ்சா வரலாற்றில் அதிக ஆர்வம் கொண்ட ஹாகா, அபுரிதசி என்ற பழங்கால நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டுரை எழுத திட்டமிட்டார்.

இரவு முழுக்க சோயாபீன்ஸை ஊறவைத்து, அதை இடித்து, துணியில் பிழிந்து சாரெடுத்து, நீருடன் கலக்கி சரியான பதம் கிடைக்க 2 மணி நேரம் காத்திருந்தார்.

பின் மெல்லிய தூரிகையால் வெள்ளைக் காகிதத்தில் தனது கட்டுரையை எழுதத் தொடங்கினார். ஈரம் காய்ந்ததும் அந்த காகிதத்தில் எழுத்துக்கள் மறைந்துவிட்டன.

பின் கட்டுரையை வெற்றுக் காகிதமாக சமர்ப்பித்த அவர், தன் பேராசிரியருக்கு காகிதத்தை சூடு செய்யவும் என ஒரு சிறு குறிப்பை சாதாரண பேனாவில் எழுதி வைத்திருந்தார்.

அதேபோல். எரிவாயு அடுப்பைப் பற்றவைத்து சூடாக்கிய பேராசிரியர் அதில் எழுத்துக்கள் தோன்றியதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.

பின், அதை ஊடகங்களுக்குக் காட்ட வேண்டும் என்பதற்காக முழுமையாக சூடு காட்டிப் படிக்காமல் சிறிது மீதம் வைத்திருந்து மாணவியின் திறமையை வெளிப்படுத்தினார்.

கற்பனைத் திறனுக்கே அதிக மதிப்பெண் என பேராசிரியல் கூறியிருந்ததால் ஹாகாவின் கட்டுரைக்கு முதல் மதிப்பெண் வழங்கினார்.

3613 total views