ஈரான் மீது அமெரிக்கா ரகசிய இணையத் தாக்குதல்

Report

அண்மையில் சவூதி எண்ணெய் ஆலைகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான்மீது ரகசிய இணையத் தாக்குதல் நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத இரு அமெரிக்க அதிகாரிகள் இவ்வாறு ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்குத் தெரிவித்திருந்தனர். கடந்த மாதம் 14ஆம் தேதியன்று சவூதி அரேபியாவின் இரு எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு டெஹ்ரான்தான் காரணம் என்று வாஷிங்டனும் ரியாத்தும் குற்றம் சாட்டியுள்ளன.

இதனை அடுத்து அமெரிக்கா மேற்கொண்ட இணையத் தாக்குதல் செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில் நடத்தப்பட்டதாகவும் அந்நடவடிக்கை டெஹ்ரானின் பிரசாரம் பரப்பும் நோக்கத்தைக் குறிவைத்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

ஈரானின் ஆக்கிரமிப்பு போக்கு, ஒரு பெரும் மோதலாக விஸ்வரூபம் எடுக்கவிடாமல் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் எடுத்து வரும் எதிர் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.

எண்ணெய் ஆலைத் தாக்குதலில் தனக்குப் பங்கில்லை என்று ஈரான் மறுத்தும் அமெரிக்காவுடன் சவூதி அரேபியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும் ஈரானே காரணம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளன.

இதற்கிடையே பாதுகாப்பு கருதி தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பற்றி பகிரங்கமாகக் கூற முடியாது என்று அமெரிக்காவின் தற்காப்பு அமைச்சின் தலைமையகம் கூறியுள்ளது.

1031 total views