சீனா தாக்கக்கூடும்; எச்சரிக்கும் தைவான்

Report

சீனாவின் பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்து ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்துக்கு அது சவாலாக அமையும் பட்சத்தில் மக்களைத் திசை திருப்ப தைவான் மீது சீனா போர் தொடுக்கக்கூடும் என்று தைவானின் வெளியுறவு அமைச்சர் ஜோசஃப் வூ எச்சரித்துள்ளார்.

தைவானின் அதிபர் தேர்தல் வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கிறது. தைவானை தன்னுடன் இணைத்துக்கொள்ள சீனா கடுமையாக முயற்சி செய்து வருகிறது. தைவானுக்கென்று சொந்த அரசாங்கம் இருக்கும்போதிலும் அதை தனது ஒரு பகுதியாகவே சீனா கருதுகிறது. தைவானுக்கு நெருக்குதல் தரும் வகையில் தைவானுக்கு இருக்கும் ஒருசில நட்பு நாடுகளையும் சீனா தன் பக்கம் இழுத்து வருகிறது. அதுமட்டுமல்லாது, தைவான் வான்வெளியில் அடிக்கடி தனது போர் விமானங்களைப் பறக்கவிடுகிறது சீனா.

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக சீனாவின் பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்து வருவதாக அமைச்சர் வூ, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

“உள்ளூர் விவகாரத்திலோ அல்லது அதன் பொருளியல் வளர்ச்சியிலோ சீனாவுக்கு நெருக்குதல் ஏற்பட்டால் நாங்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். எங்களுக்கு எதிராக சீனா அதன் ராணுவத்தை அனுப்பும் சாத்தியம் உள்ளது. அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்க வேண்டும்,” என்றார் அமைச்சர் வூ .

1314 total views