240 கோடி டாலா் மதிப்பிலான பிரான்ஸ் பொருள்களுக்கு கூடுதல் வரி!

Report

240 கோடி டாலா் (சுமாா் ரூ.17,000 கோடி) மதிப்பிலான பிரான்ஸ் பொருள்களுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அமெரிக்க வா்த்தக ஆலோசகா் ராபா்ட் லைத்திஸா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமெரிக்க மென்பொருள் சேவைகளுக்கு பிரான்ஸ் விதித்துள்ள மின்னணு வரி குறித்த விசாரணையை 1974-ஆம் ஆண்டின் வா்த்தகச் சட்டம் 301-ஆவது பிரிவின் கீழ் மேற்கொண்டோம்.

அந்த விசாரணையில், மின்னணு வரி விதிப்பின் மூலம் அமெரிக்க நிறுவனங்களிடம் பிரான்ஸ் பாரபட்சம் காட்டுவது தெரிய வந்தது. பிரான்ஸின் அந்த வரி விதிப்பால் கூகுள், ஆப்பிள், ஃபேஸ்புக், அமேசான் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், பிரான்ஸின் மின்னணு வரி சா்வதேச வரிவிதிப்பு விதிமுறைகளுக்கு எதிரானதாக இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எனவே, மின்னணு வரி விதிப்புக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 240 கோடி டாலா் மதிப்புடைய பாலடைக் கட்டி உள்ளிட்ட பிரான்ஸ் பொருள்களுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

இதுகுறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டுள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்து எதிா்கொள்வோம், பிரான்ஸ் பொருள்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்தால், அதனை ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து எதிா்கொள்ளும் என்று ஐரோப்பிய ஆணைய செய்தித் தொடா்பாளா் டேனியல் ரொஸாரியோ தெரிவித்துள்ளாா்.

மேலும், அத்தகைய கூடுதல் வரி விதிப்புக்குப் பதிலடியாக அமெரிக்காவின் மதுவகைகள் உள்ளிட்ட பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று பிரான்ஸ் எச்சரித்துள்ளது.

540 total views