ஈரான் சிறையில் இருந்து 3 தமிழக மீனவர்கள் விடுதலை!

Report

ஈரான் நாட்டு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக ஜனவரி மாதம் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்த தனியார் மீன்பிடி நிறுவனத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த இருதயராஜ், கிரீட்வின், பிரதீப் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

இவர்கள் மூவரும் கடந்த ஜனவரி 2-ஆம் தேதி வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றபோது, ஈரான் நாடு கடலோரக் காவல் படை அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து, ஈரான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு கடந்த பிப்ரவரி மாதம் கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில், மத்திய அரசின் தலையீட்டைத் தொடர்ந்து தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள் மூவரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து அவர்கள் மூவரும் விமானம் மூலம் இன்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அங்குள்ள இந்தியாவுக்கான தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

685 total views