காதலிக்காக கை கட்டை விரலை இழந்த வாலிபர்....கால் விரலை எடுத்து பொருத்திய மருத்துவர்கள்

Report

காதலிக்காக ஆசை ஆசையாக மரப்பொம்மை செய்த போது கை கட்டை விரலை இழந்த வாலிபர் ஒருவருக்கு, அவரது கால் விரல் ஒன்றை எடுத்து கைக்கு கட்டை விரலாக மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர்.

ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான மிச்சிகனில் உள்ள கார்சன் நகரத்தைச் சேர்ந்தவர் ஐடன் அட்கின்ஸ். இவர், கடந்த ஏப்ரல் மாதம் தனது காதலிக்கு மரபொம்மை ஒன்றை பரிசளிக்க நினைத்தார். அதையும் தன் கையினாலேயே செய்து காதலிக்கு பரிசளிக்க விரும்பினார்.

இதனை அடுத்து செயலில் இறங்கிய ஐடன் காதலிக்காக அழகான மரப்பொம்மை ஒன்றை வடிவமைக்க துவங்கினார்.

பொம்மையை முழுவதுமாக செய்து முடிக்கும் முன்பு தான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. வேகவேகமாக பொம்மையை அவர் செதுக்கி கொண்டிருந்த போது நாலாபுறமும் மரத்துண்டுகள் பறந்தன. கூடவே சேர்ந்து அவரது கையின் கட்டை விரலும் துண்டாகி பறந்தது.

கட்டை விரல் துண்டானதால் அதிர்ச்சியடைந்த ஐடன் குடும்பத்தினர் விரைந்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அப்போது, மருத்துவர்கள் 4 மணி நேரத்திற்குள் துண்டான அவரது கட்டை விரலை கொண்டு வந்தால் மீண்டும் அவ்விரலை பொருத்திவிடலாம் என கூறினார்.

ஆனால், எவ்வளவு தேடியும் அவரது கட்டை விரலை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கடந்த சில மாதங்களாக கட்டை விரல் இன்றியே வாழ்ந்தார் ஐடன். கட்டை விரல் இல்லாத காரணத்தால் மனம் தளர்ந்து இயல்பாக வாழ முடியாமல் தவித்தார் ஐடன். எனினும் மருத்துவர்கள் ஒரு மாற்று வழியை கூறினர்.

அதன்படி, அவரது கால் விரல் ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து, கையில் கட்டை விரலுக்கு மாற்றாக வைக்கலாம் என கூறினர்.

இந்த யோசனைக்கு ஐடன் சம்மதம் தெரிவித்ததை அடுத்து அவரது இடது காலில் கட்டை விரலுக்கு அடுத்து இருந்த விரலை அகற்றி, ஐடனின் இடது கை கட்டை விரல் இருந்த இடத்தில் மருத்துவர்கள் பொருத்தினர்.

இந்த விரல் மாற்று அறுவை சிகிச்சையால் ஐடன் மிகுந்த மகிச்சியில் உள்ளார். முன்பிருந்ததை போல தற்போதைய கட்டை விரலை தம்மால் நன்றாக வளைக்கவும், நிமிர்க்கவும் முடிவதாக கூறியுள்ளார்.

காதலிக்கு பொம்மை செய்ய போய் கை கட்டை விரலை இழந்த வாலிபருக்கு, மருத்துவர்கள் அவர் கால் விரலையே எடுத்து மீண்டும் கையின் கட்டை விரலாக மாற்றியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

804 total views