சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

Report

இதுவரை அறியப்படாத கொரோனா வைரஸின் மூலத்தை சீனா தொடர்ந்து ஆய்வு செய்து கண்டறிவது அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சளி முதல் கடுமையான நோய்கள் வரை நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்ட வைரஸ்களின் ஒரு பெரிய குடும்பம் கொரோனா வைரஸ்கள்.

நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறிகள் சுவாச அறிகுறிகள், காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் மற்றும் சுவாசிக்க சிரமப்படுதல் ஆகியவை அடங்கும்.

மிகவும் கடுமையான சந்தர்ப்பங்களில், தொற்று நிமோனியா, கடுமையான சுவாச நோய்க்குறி, சிறுநீரக செயலிழப்பு மற்றும் இறப்பை கூட ஏற்படுத்தும்.

கொரோனா வைரஸ்கள் விலங்குகளில் இருந்து மனிதர்களிடையே பரவுகின்றன. மேலும், தற்போது அறியப்பட்ட பல கொரோனா வைரஸ்கள் விலங்குகளில் உள்ளன. அவை இன்னும் மனிதர்களிடையே நோய்தொற்றை ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில், சீனாவில் வுஹான் நகரிலிருந்து உருவாகியுள்ளதாக நம்பப்படும், தூதனமான கொரோனா வைரஸின் மூலத்தை கண்டுபிடிக்குமாறு அந்நாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து, மத்திய சீன நகரமான வுஹானில் உள்ள மக்கள் வைரஸ் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணம் பற்றி ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, சீனாவின் உஹான் நகரைச் சேர்ந்த பயணி ஒருவர் நோய்த்தொற்று காரணமாக கடந்த 8ம் தேதி தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சீனாவைத் தவிர மற்ற நாடுகளில் இருந்தும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் என்று அஞ்சுவதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வுஹானில் உள்ள சுகாதார ஆணையம் இந்த வைரஸ் மனிதர்களிடமிருந்து பரவுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அறிவித்துள்ளது.

இருப்பினும், சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், நிறுவனத்தின் அவசரக் குழுவின் உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்கத் திட்டமிட்டுள்ளார்.

இந்த புதிய வைரஸின் மூலத்தை கண்டறிய சீன அரசை வலியுறுத்தியுள்ள உலக சுகாதார அமைப்பு, வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களை எவ்வாறு கண்டறிந்து சிகிச்சையளிப்பது என்பது குறித்த வழிகாட்டுதலையும் வெளியிட்டுள்ளது.

அதில், கைகளை கழுவுதல், இருமல் மற்றும் தும்மும்போது வாய் மற்றும் மூக்கை மறைத்தல், இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்தல் மற்றும் இருமல் மற்றும் தும்மல் போன்ற சுவாச நோயின் அறிகுறிகளைக் உடைய யாருடனும் நெருங்கிய தொடர்பைத் தவிர்த்தல் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன.

818 total views