போர்க்களத்தில் எதிர்கொள்ள துணிவு இல்லாத அமெரிக்காவுக்கு எடுபிடி வக்காலத்து!

Report

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது வார்த்தைகள் குறித்து கவனமாக இருக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா-ஈரான் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வரும் நிலையில், ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை விமானம் மூலம் குண்டுவீசி அமெரிக்கா கொன்றது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரானும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் அமெரிக்கா ராணுவத்தினர் 80 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானபோதும் , இதை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இந்நிலையில் ஈரானின் மூத்த மத தலைவரான அயத்துல்லா அலி காமெனி 2012-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக தலைநகர் டெஹ்ரானில் உள்ள மசூதியில் தொழுகை நடத்தினார்.

அப்போது, பேசிய அவர் பயங்கரவாதத்துக்கு எதிரான சிறந்த தளபதியாக காசிம் சுலைமானி இருந்தார் என்றும், பல்வேறு நாடுகளின் மக்களும் அவரை அங்கீகரித்து இருந்த நிலையில் சுலைமானியை போர்க்களத்தில் எதிர்கொள்வதற்கு அமெரிக்கர்களுக்கு துணிவில்லை என்பதனால் அவரை அவசர அவசரமாக அவரை கொன்று விட்டதாக கூறியுள்ளார்.

அத்துடன் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிப்படை நடத்திய ஏவுகணை தாக்குதல்கள், அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதல்தான் என்றும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளும் அமெரிக்காவின் எடுபிடிகளாகத்தான் இருக்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணுசக்தி பேச்சுவார்த்தையில் இந்த ஐரோப்பிய நாடுகளை ஈரான் நம்பக்கூடாது எனவும் அவர்களது பேச்சுவார்த்தைகள் அனைத்தும் காலத்துக்கு ஏற்றவாறு மாறுபடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது பேச்சுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஈரானின் உச்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் அண்மையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் குறித்து சில மோசமான கருத்துகளை தெரிவித்துள்ளார். அவருடைய பேச்சில், `இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள்’ என்று அநாகரீகமாக தாக்கி பேசியுள்ளார். ஏற்கனவே, அவர்களுடைய நாட்டின் பொருளாதாரம் செயலிழந்து உள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, அவர் மிகுந்த எச்சரிக்கையுடன் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

4108 total views