உல்லாச கப்பல்களில் இருந்து பயணிகள் திடீரென மாயம்!அதிரவைக்கும் பின்னணி

Report

பார்கள், ஸ்பாக்கள், நீச்சல் குளங்கள், 5 ஸ்டார் ஹோட்டல்களுக்கு இணையான ரெஸ்டாரெண்ட்கள் என உல்லாச கப்பல்களில் இருக்கும் ஒவ்வொரு அம்சமும் சுற்றுலா பயணிகளை சுண்டியிழுக்கிறது.

இதன் கரணமாகவே வாழ்நாளில் ஒரு முறையாவது, ஆடம்பரமான உல்லாச கப்பல்களில் பயணித்து விட வேண்டும் என்ற ஆவல் நிச்சயமாக அனைவருக்கும் இருக்கும்.

உல்லாச கப்பல்களின் ஆடம்பரமான ஒரு பக்கத்தை பற்றி மட்டுமே நீங்கள் இதுவரை அதிகம் கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் உல்லாச கப்பல்கள் பற்றி யாருக்கும் தெரியாத இன்னொரு கருப்பு பக்கம் உள்ளது.

உல்லாச கப்பல்களில் ஒரு ஆண்டுக்கு மட்டும் 20 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர். அதாவது 2 கோடி பேர். ஆனால் இது தோராயமான எண்கள் மட்டும்தான். ஒரு ஆண்டுக்கு உல்லாச கப்பல்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு எதுவும் கிடையாது.

இவர்களில் ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 20 பயணிகள் உல்லாச கப்பல்களில் இருந்து மர்மமான முறையில் திடீரென மாயமாகி விடுகின்றனர். அந்த வகையில் கடந்த 2000ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 300-350 பேர், உல்லாச கப்பல்களில் இருந்து மர்மமான முறையில் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வறு மர்மமான முறையில் மாயமானவர்கள் பற்றிய ஒரு சில தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கின்றன.

ஒரு முறை பெண் ஒருவர் தனது உறவினர்களுடன் உல்லாச கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஆனால் திட்டமிட்டபடி அவர் கேபினுக்கு திரும்பி வரவில்லை.

இதற்காக அவரது உறவினர்கள் அதிர்ச்சியடையவில்லை. உல்லாச கப்பலின் ஏதேனும் ஒரு பகுதியில் அவர் தனியாக பயணத்தை ரசித்து கொண்டிருப்பார் என்று நினைத்து கொண்டனர். ஆனால் உல்லாச பயணம் முடியும் சமயத்தில்தான், அந்த பெண் மாயமானதை அவர்கள் உணர்ந்தனர். இதே போன்று மற்றொரு சம்பவத்தில், தேனிலவு சென்ற ஆண் ஒருவர் திடீரென மர்மமாக மறைந்து போனார்.அவர் தற்போது வரை திரும்பி வரவே இல்லை.

இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரது கேபினில் ரத்த கறைகள் இருப்பதை கண்டறிந்தனர். மேலும் உல்லாச கப்பலின் பக்கவாட்டு பகுதியிலும், ரத்த கோடுகள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். இதேபோல் ஒரு முறை உல்லாச கப்பலின் பெண் பணியாளர் ஒருவர் போனில் பேசி கொண்டிருந்தபோது அவரது முகத்தில் கவலை படர்ந்திருந்தது. அதுதான் அந்த பெண்ணை கடைசியாக பார்த்தது. அதன் பின்பு அவர் திடீரென மாயமாகி விட்டார்.

இவை ஒரு சில உதாரணங்கள் மட்டும்தான். இதுபோல் இன்னும் பலர் உல்லாச கப்பல்களில் இருந்து, மர்மமான முறையில் மாயமாகி கொண்டுள்ளனர். அவர்கள் எங்கு போகின்றனர்? அவர்களுக்கு என்ன ஆனது? என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பொதுவாக உல்லாச கப்பல்கள் என்றாலே மது விருந்துடன் ஆட்டம், பாட்டம் களைகட்டும். அதுபோன்ற சமயங்களில், போதை தலைக்கேறியதால் ஒரு சிலர் தவறுதலாக உல்லாச கப்பல்களில் இருந்து கடலில் விழுந்து மாயமாகி விடுவதாக கூறப்படுகிறது.

இதுதவிர உல்லாச கப்பல்களின் ஆபத்தான இடங்களில் நின்று கொண்டு செல்பி எடுப்பது போன்ற விபரீத சம்பவங்களாலும், ஒரு சிலர் கடலில் தவறி விழுந்து விடுவதாக உல்லாச கப்பல்களின் பணியாளர்கள் கூறுகின்றனர். அவர்களை யாரும் கவனிக்காமல் போனால், அவர்கள் உயிருடன் திரும்பி வருவதும் சிரமம்தான்.

அத்துடன் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்வதற்கான இடமாக உல்லாச கப்பல்களை தேர்வு செய்வதாகவும் கூறப்படுகிறது.

உல்லாச கப்பல்களில் இருந்து மாயமாகும் பெரும்பாலானோர் காப்பாற்றப்படுவதில்லை என்பது சோகமான ஒரு செய்தி. சில சமயங்களில் விரிவான தேடுதல் வேட்டை நடத்தப்படவே செய்கிறது. ஆனால் பெரும்பாலான தேடுதல் பணிகள் ஏமாற்றத்தில்தான் முடிகின்றன.

ஒரு சில தேடுதல் மற்றும் மீட்பு பணிகளின்போது, உல்லாச கப்பல்களில் இருந்து மாயமானவர்களுடைய உடலின் எஞ்சிய பகுதி அல்லது அவர்களின் உடைமைகள் ஏதேனும் மட்டும் கிடைக்கிறது. இதை மட்டும் வைத்து கொண்டு அவர்களுடைய உறவினர்கள் இறுதி சடங்கு நடத்தும் அவலமும் உள்ளது.

உல்லாச கப்பல்களில் இருந்து மாயமாகும் நபர்களின் வழக்குகள் பெரும்பாலும் தீர்க்கப்படுவது கிடையாது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உல்லாச கப்பல்களில் நீங்கள் ஏறும்போது உண்மையில் நீங்கள் வெளிநாட்டு மண்ணில் காலடி எடுத்து வைக்கிறீர்கள் என்பதே இதற்கு முதன்மையான காரணமாக கூறப்படுகிறது.

அதாவது உல்லாச கப்பல்கள் பெரும்பாலும் பனாமா அல்லது பஹாமஸில்தான் பதிவு செய்யப்படுகின்றன. எனவே அவர்களின் விதிமுறைகள்தான் பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாக வெளிநாட்டினர் யாராவது உல்லாச கப்பலில் இருந்து மாயமானால், அவர்களை கண்டறிவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இதில் பல்வேறு அரசாங்கங்கள் தலையிட்டாலும், உல்லாச கப்பலில் இருந்து மாயமானவர்களை கண்டறிவது சவாலான காரியமாகவே இருக்கிறது. எனவே உல்லாச கப்பல்களில் பயணிக்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் பயணிகள் இருப்பது அவசியம்.

உல்லாச கப்பல்களில் பெண்களை விட ஆண்கள்தான் மாயமாவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. அதேசமயம் உல்லாச கப்பல்களில் இருந்து மாயமாகும் பயணிகளின் சராசரி வயது 44 ஆக இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

10200 total views