காலநிலை அகதிகளை சொந்த நாட்டிற்கு திருப்பியனுப்ப முடியாது- ஐநாவின் வரலாற்று தீர்ப்பு!

Report

காலநிலை அகதிகளை அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பியனுப்பமுடியாது என ஐநா குழுவொன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வெளியிட்டுள்ளது.

காலநிலை நெருக்கடியால் தங்கள் உயிருக்கு ஆபத்து என கருதும் மக்களை அவர்களது நாட்டிற்கு திருப்பியனுப்புவது சட்டவிரோதமானது என ஐநாவின் மனித உரிமை குழு தீர்ப்பளித்துள்ளது.

பசுவிக் நாடான கிரிபட்டியை சேர்ந்த நபர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கு தொடர்பிலேயே ஐநா இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடல்மட்டம் அதிகரிப்பதால் அதிகளவு ஆபத்தை எதிர்கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக கருதப்படும் கிரிபட்டியை சேர்ந்த நபர் ஒருவர், தனக்கும் தனது குடும்பத்தினரினது உயிருக்கும் ஆபத்துள்ளதாக தெரிவித்து கடந்த 2013 இல் நியுசிலாந்தில் பாதுகாப்பு விசாவிற்காக விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில் நியுசிலாந்து நீதிமன்றம் அவரின் விசா கோரிக்கையை நிராகரித்து அவரை தனது சொந்தநாட்டிற்கு திருப்பி அனுப்பிய நிலையில் ஐநா மனித உரிமைகள் குழு இது குறித்து விசாரணை செய்துள்ளது.

குறிப்பிட்ட குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது கடல்மட்டம் அதிகரிப்பதாலும் ஏனைய தீவுகளில் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாலும் குறித்த நபர் வாழும் தீவில் சனத்தொகை பல மடங்காக அதிகரித்துள்ளதும் அங்கு சமூக குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

அத்துடன் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட அந்த நபர் தனது பகுதியில் சுத்தமான நீர் இல்லையெனவும்,உவர் நீர் பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியாது எனவும் தனது குடும்பத்தவர்களின் உயிருக்கு ஆபத்து எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் அவரது புகலிடக்கோரிக்கையை நியுசிலாந்து நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அவரின் உயிருக்கு ஆபத்தில்லை என்பதை தனது தீர்ப்பில் தெரிவித்துள்ள ஐநா எனினும் எதிர்காலத்தில் காலநிலை அகதிகளை திருப்பி அனுப்புவதை தவிர்க்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

காலநிலை நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அகதிகளை அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்புவது அவர்களின் உரிமை மறுக்கப்படுவதற்கு வழிவகுக்கலாம் எனவும் ஐநா சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் ஒரு நாடே நீரில் மூழ்கும் நிலை என்பது மிகவும் ஆபத்தானது என குறிப்பிட்டுள்ள ஐநா குழு, அந்த நாட்டில் கௌரவத்துடன் வாழ்வதற்கான உரிமை இல்லாமல் போகலாம் எனவும் கூறியுள்ளது.

2508 total views