எங்கள் உளவாளியாக செயற்படுங்கள்! அவுஸ்திரேலிய பெண்ணிடம் ஈரான் வேண்டுகோள்

Report

ஈரானில் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் அவுஸ்திரேலிய பெண் ஒருவரிடம் தனது நாட்டிற்காக உளவாளியாக செயற்படுமாறு ஈரான் கேட்டுக்கொண்டதாகவும் எனினும் அவர் அதனை நிராகரித்துவிட்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானின் ஈவென் சிறைச்சாலைக்குள் இருந்து வெளியே அனுப்பப்பட்ட கடிதங்கள் மூலம் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைலி மூர் கில்பேர்ட்டிடம் ஈரானிய அதிகாரிகள் தங்கள் நாட்டிற்காக உளவாளியாக செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்ததை காண்பிக்கும் கடிதங்களை பார்வையிட்டுள்ளதாக கார்டியன் தெரிவித்துள்ளது.

ஈரானிய அதிகாரிகளிற்கான கடிதமொன்றில் கில்பேர்ட் ஈரானின்புரட்சிகர காவல்படையின் உளவாளியாக செயற்படுவதற்கு நீங்கள் விடுத்த வேண்டுகோளை, நான் முற்றாக நிராகரிப்பதற்கான கடிதமாக இதனை கருதுங்கள் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் எந்த சூழ்நிலையிலும் நான் எனது முடிவை மாற்றமாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் ஒரு உளவாளியில்லை, என்றும் ஒருபோதும் உளவாளியாக செயற்பட்டதுமில்லை, எந்த நாட்டினதும் புலனாய்வு அமைப்பிற்கும் உளவாளியாக பணியாற்றும் எண்ணம் தன்னிடமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஈரானிலிருந்து வெளியேறும்போது நான்சுதந்திரமான பெண்ணாக வெளியேற விரும்புகின்றேன்,என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் உணவு வாங்குவதற்கான பணம் இல்லை எனவும்,தொலைபேசி உரையாடல்களை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தனது உடல் மற்றும் உளநிலை அடிக்கடி பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மெல்பேர்ன் பல்கலைகழக இஸ்லாமிய கற்கை நெறிகளிற்கான விரிவுரையாளரான கில்பேர்ட் , ஈரானில் கல்விசார் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு நாடுதிரும்புவதற்காக விமானநிலையம் சென்றவேளை கைதுசெய்யப்பட்டார்.

அவுஸ்திரேலிய பிரிட்டன் பிரஜையான அவரை ஈரானிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு பிரிவினர் கைது செய்த நிலையில், அவருக்கு எதிராக வேவுபார்த்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இதேவேளை கடந்த 2018 செப்டம்பரில் கைதுசெய்யப்பட்ட கில்பேர்ட்டிற்கு ஈரானிய நீதிமன்றம் பத்து வருட சிறைத்தண்டனை விதித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

4265 total views