கொரோனாவால் 65 மில்லியன் பேர் உயிரிழக்கும் அபாயம்! அமெரிக்கா எச்சரிக்கை

Report

சீனாவில் ஆரபித்து பரவி வரும் கொரோனா வைரஸினால் உலகளாவிய ரீதியில் 18 மாதங்களுக்குள் 65 மில்லியன் மக்கள் உயிரிழக்கும் அபாயமுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜோன் ஹோப்கின்ஸ் மருத்துவ ஆய்வுப் பிரிவினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இந்த வைரஸ் பரவுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜோன் ஹோப்கின்ஸ் மருத்துவ ஆய்வுப் பிரிவு இது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக சந்தேகிக்கப்படும் சீன பெண்​ ஒருவர் உள்ளிட்ட இருவர் இலங்கை தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் வுஹான் நகரில் முதலில் பதிவான கொரோனா வைரஸ், அமெரிக்கா, பிரான்ஸ், நேபாளம், தாய்லாந்து, ஜப்பான், வட கொரியா, தாய்வான், சிங்கப்பூர், வியட்னாம் உள்ளிட்ட 11 நாடுகளில் தற்போது பரவியுள்ளது.

இந்த தாக்கத்தினால் சீனாவில் மாத்திரம் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் முதலில் பதிவான வுஹானில் வைத்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் பீடிக்கப்பட்ட 237 நோயாளர்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக இலங்கையின் சீன அலுவலக பிரதிநிதி சுகத் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

சீனாவிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சீனாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

எனினும் இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் பதிவாகவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க கூறினார்.

இந்த நிலையில் வுஹான் நகரில் உள்ள இலங்கை மாணவர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5847 total views