“பிளாஸ்மா தானம்” செய்யும் கொரோனாவை வென்ற போராளிகள்

Report

சீனாவை மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகி வரும் நிலையில், ஒரு சிலர் அந்த நோயை வென்று இயல்புநிலைக்கு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு கொரோனா தாக்கத்திலிருந்து குணமானோர், பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் சிகிச்சைக்காக தங்களது ரத்த பிளாஸ்மாவை ( ரத்த அணுக்களை கொண்டு செல்லும் நிறமற்ற திரவம்) தானமாக அளித்து வருகின்றனர்.

கொரோனாவின் மையமாக உள்ள சீனாவின் வுஹான் மாகாணத்தில், கொடூர நோய் தாக்கத்தில் இருந்து மீண்ட சிலர் தங்களது ரத்த பிளாஸ்மாவை தானமாக அளித்துள்ளதாக மாகாணத்தின் COVID-19 அறிவியல் ஆராய்ச்சி குழு கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையில் ரத்த பிளாஸ்மா குறிப்பிடத்தக்க பங்காற்றி வருவதாக மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து கண்டறிய ரத்த பிளாஸ்மா உதவிகரமாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஜியாங்சியா (Jiangxia) மாவட்டத்தின் சிறந்த மக்கள் மருத்துவமனை மற்றும் பாரம்பரிய சீன மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமான சிலர், தங்களுக்கு சரியான நேரத்தில் கிடைத்த மருத்துவ சிகிச்சை நோயால் பாதிக்கப்பட்ட பிறருக்கும் கிடைக்க வேண்டும் என நினைத்தனர். அத்துடன் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட சில மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்தனர்.

இதனை அடுத்து வைரஸ் தொற்றிலிருந்து மீண்ட பொது மக்களில் சிலர், தாங்களாகவே முன் வந்து ரத்த பிளாஸ்மாவை தானம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு குணமடைந்தவர்கள் தானமளித்த பிளாஸ்மா மூலம், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தங்களது சிகிச்சை முறையுடன் சேர்த்து பிளாஸ்மா சிகிச்சையும் அளிக்கப்படுவதால் நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என்றும், மாறாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட 12 – 24 மணி நேரத்திற்குள் அவர்களின் உடலில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் Jiangxia மருத்துவமனையிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், 30-க்கும் குறைவான நபர்களே இதுவரை பிளாஸ்மா தானம் செய்துள்ளதாகவும், எஞ்சியவர்களும் எந்த தயக்கமும் இன்றி பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3941 total views