1,400 பேர் கொண்ட உலகின் சிறிய தீவும் தனிமைப்படுத்தப்பட்டது !

Report

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் உலகின் சிறிய தீவு என்ற பெயருடன் மும்பையில் உள்ள பஞ்சு தீவு தனிமைப்படுத்தப் பட்டுள்ளது. இதனால் அங்குள்ள 1,400 மக்களும் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்கள்.

இந்தியளவில் அதிகமான கொரோனா தொற்று ஏற்பட்ட மாநிலமாக மகாராஷ்ட்ரா மாறியுள்ளது. இதுவரை 128 பேர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளனர். நேற்று தானே மாவட்டத்தில் முதலாவது கொரோனா தொற்று உள்ளவர் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இதையடுத்தே தானே மாவட்டத்தில் உள்ள இத்தீவு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மும்பைக்கு அருகே உள்ள தானே மாவட்டத்தில் இப் பஞ்சு கிராமம் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் தீவாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தீவு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அத்துடன் தீவில் இருந்தும் யாரும் வெளியிடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் தீவுக் கிராமத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சு தீவில் உள்ளவர்களது பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகிறது. அதைவிட பெரும்பாலனாவர்கள் விவசாயக்கூலிகளாக இருக்கின்றனர். அயல் மாவட்டங்களுக்கு விவசாயக் கூலியா சென்று தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருபவர்கள். அத்துடன் சுற்றுலா பயணிகளும் அதிகம் செல்வதால் சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்ட தொழில் நடவடிக்கைகளிலும் கணிசமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தீவு முழுமையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதையடுத்து, அயல் கிராமங்களில் இருந்தான படகுப் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. தீவுக்கு வெளியே கூலி வேலைக்கு சென்ற அனைவரும் உடனடியாக தீவுக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தினக்கூலிகளாகவும் தீவுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் மூலமாகவும் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்திவந்த நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதால் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி உதவுமாறு அயல் கிராமங்களில் உள்ளவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

7571 total views