உறவு முறிகிறது? - கடனுதவி, எண்ணெய் சப்ளை நிறுத்தம்... சவுதி அரேபியா அதிரடி

Report

பாகிஸ்தானுக்கான கடனுதவி, எண்ணெய் சப்ளை ஆகியவற்றை சவுதி அரேபியா நிறுத்துவதுடன் இருநாடுகளுக்கு இடையிலான பல ஆண்டுகள் உறவு முடிவுக்கு வருவதாகவும் மிடில் ஈஸ்ட் மானிட்டர் எனும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

மேலும் நவம்பர் 2018-ல் சவுதி அரேபியா 6.2 பில்லியன் டாலர்கள் கடன் உதவியை பாகிஸ்தானுக்காக அறிவித்தது. இதில் 3 பில்லியன் டாலர்கள் கடன் மற்றும் 3.2 பில்லியன் டாலர்கள் எண்ணெய்க் கடன் ஆகியவை அடங்கும். இதில் பாகிஸ்தான் 1 பில்லியன் டாலர் கடன் தொகையை திருப்பிச் செலுத்தவும் பணிக்கப்பட்டது.

இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு சென்ற போது இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக மிடில் ஈஸ்ட் மானிட்டர் செய்தி கூறுகிறது.

இப்போது உறவில் சிக்கல் ஏற்பட்டதற்கு காஷ்மீர் விவகாரம் காரணமாகக் கூறப்படுகிறது, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி சவுதி அரேபியா தலைமை இஸ்லாமிய கூட்டுறவு அமைப்புக்கு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்ததையடுத்தே சவுதி அரேபியா இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மிடில் ஈஸ்ட் மானிட்டர் தெரிவிக்கிறது.

இஸ்லாமிக் கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை கூட்ட பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் , இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் ஆதரவு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்குக் கிடைக்கவில்லை.

இதனையடுத்து இம்ரான் கான் கூறுகையில், 'நமக்கு குரல் இல்லை, நம்மிடையே ஒற்றுமையும் இல்லை. காஷ்மீர் விவகாரத்தில் நம்மிடையே மொத்தமாக கருத்து வேறுபாடுகளே நிலவுகின்றன, நாம் குரல் கொடுக்க வேண்டும்' என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அரசியல் சட்டம் 370ம் பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிராகக் குரல் கொடுக்க பாகிஸ்தான் தொடர்ந்து விரயமாக போராடி வருகிறது. இஸ்லாமிய வெறுப்பு இந்தியாவில் பரப்பப்படுவதாக பாகிஸ்தான் கூறியது, இதற்காக மாலத்தீவுகளையும் துணைக்கு அழைத்தது.

ஆனால் மாலத்தீவுகளின் ஐநா பிரதிநிதி தில்மீஸா ஹுசைன் பாகிஸ்தானை மறுத்து, 'தனித்தனியான கூற்றுக்கள், சமூகவலைத்தளங்களில் பரப்பப்படும் பொய்த்தகவல்கள் 130 கோடி மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்காது' என்று கூறி பாகிஸ்தானுக்கு அடி கொடுத்தார்.

இந்நிலையில் சவுதி அரேபியா-பாகிஸ்தான் உறவு முடிவுக்கு வருவதாக மிடில் ஈஸ்ட் மானிட்டர் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

8191 total views